Monday, August 26, 2013



கடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் எல்லா வகையான வேற்றுமைகளையும் களைந்து உலக சமுதாயங்களின் கலாசாரக் கொள்கை சார்ந்த தனித்துவங்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. உலகமே இன்று ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாறியுள்ளது. ஒருவர் தான் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தணிக்கை என்பதற்கே இடமில்லாமல் போய்விட்டது.

மேற்குலகமே இந்த கலாச்சாரப் படையெடுப்பை மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் பலியாவோரே நாம். மேற்குலகு அதன் அரசியல், பொருளாதார, இராணுவ சக்திகளுடன் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் கொண்டு அதன் கலாசார திணிப்பை செய்து வருகின்றது.

இந்தப் படையெடுப்புக்கு முன்னால் எமது நிலைப்பாடு என்ன? இதிலிருந்து எமது நம்பிக்கைகள், விழுமியங்கள், ஒழுக்க மாண்புகள், கலாசாரம் முதலியவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்?



Internet  உட்பட நவீன தொடர்பாடல், தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றி ஏராளமான விடயங்கள் உலகளாவிய ரீதியில் பரப்பப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பாலானவை இஸ்லாத்திற்கு எதிரானவை, அதைத் தூற்றுபவை; அதன் மீது சேறு பூசுபவை. இதற்காக எவரையும் சாடுவதில் அர்த்தமில்லை. குற்றவாளிகள் நாங்களே.

ஏன் நாம் நவீன தொடர்பாடல் சாதனங்களுடன் ஓர் உடன்பாடான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது? அவற்றை ஏன் எமது நலன்களுக்காக நாம் பயன்படுத்த முடியாது? எதற்காக அவற்றை எமது எதிரிகளிடம் மட்டும் விட்டு வைத்தல் வேண்டும்?

இன்று உலகில் Internet சாதனத்தைப் பயன்படுத்துவோர் தொகை பலகோடி. இவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கும் 50 சத வீதத்தால் அதிகரிக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இளைய தலைமுறையினர் இத்தகைய சாதனங்களினால் தீவிரமாகக் கவரப்பட்டு வருகின்றனர்.

தொடர்பாடல் சாதனங்களுக்கூடாக இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைக்கப்படும் விஷமத்தனமான கருத்துக்களால் முஸ்லிமல்லாதோர் மட்டுமன்றி முஸ்லிம்களே பிழையாக வழி நடத்தப்படும் ஆபத்து தோன்றியுள்ளது.

காதியானிகள் Internet சாதனத்தைப் பயன்படுத்தி தமது கொள்கைப் பிரசாரத்தைச் செய்து வருகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரிலேயே இவர்களது பிரசார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவர்களது மார்க்க விளக்கங்கள், சட்டத் தீர்ப்புக்களெல்லாம் பிரசுரிக்கப்படுகின்றன.

இஸ்லாத்தை உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை, ஒவ்வொரு வீட்டின் கதவையும் இலகுவில் தட்டக்கூடிய சந்தர்ப்பத்தை நவீன தொடர்பாடல் ஊடகங்கள் நமக்குத் தருகின்றன. எனவே அல்லாஹ்வுடைய தீனை உலகில் மேலோங்கச் செய்யும் நோக்குடன் இவற்றையும் நாம் பயன்படுத்த முன்வரல் வேண்டும்.

நவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்துக்களையும் இங்கே உதாசீனப்படுத்தல் முடியாது. அவை இன்று பெரும்பாலும், தீமைகளின் வாயிலாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தஃவாவுக்காக இவற்றைப் பயன்படுத்தப்போய் - குளிப்பதற்காகச் சென்று சேற்றைப் பூசிக்கொண்டவரின் கதையாகி விடலாகாது. எனவே மிக எச்சரிக்கையுடனும் விழிப்புடனும்- ஜாஹிலிய்யத்தின் வளையில் சிக்கிவிடாது- இவற்றை மிகவும் பொறுமையுடன் கையாள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும்.

''(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது இறைவனின் வழியின் பால் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ (சிறந்ததோ) அதைக் கொண்டும் அவர்களுடன் விவாதிப்பீராக''(ஸூறா 16:125)


அஷ்ஷெய்க் A. C. அகார் முஹம்மத் (நளீமி)
பிரதிப்பணிப்பாளர் - ஜாமியா நளீமிய்யா

0 comments:

Post a Comment